“தாய்மொழி மனிதனின் புறப்பொருளாக உருவாக்கம் பெற்றிருந்தாலும் மனிதனின் சிந்தனைகளை பழக்க வழக்கங்களை பண்பாட்டைத் தீர்மானிக்கிற அளப்பரிய ஆற்றல் கொண்ட அகப்பொருள் என்பதே ஆகும்.”

01/31/2010 at 22:13 Leave a comment

தாய்மொழி மனிதனின் புறப்பொருளாக உருவாக்கம் பெற்றிருந்தாலும் மனிதனின் சிந்தனைகளை பழக்க வழக்கங்களை பண்பாட்டைத் தீர்மானிக்கிற அளப்பரிய ஆற்றல் கொண்ட அகப்பொருள் என்பதே ஆகும்.”
 
புறக்கணிப்பிற்கு உள்ளாகும் தாய்மொழி
 
 என்னுடைய வாழ்நாளில் எப்போதும் இல்லாத அளவிற்குத் “தமிழ் இனம்” என்கிற சொல்லாடல் அதிகமாகப் புழக்கத்தில் இருப்பது இதுதான் முதல் முறை. ஆனால் இப்படியான ஒரு வாய்ப்பை வரலாறு நமக்கு வழங்கியதற்காக நாம் கொடுத்த விலை ஆயிரக்கணக்கில் தமிழர்களின் உயிர். இதில் தனது மொழியின் மீதான, இனத்தின் மீதான மாறாத பற்றினால் உயிரிழந்தவர்களும், எந்தக் காரணங்களும் அறியாமல் அழிந்து போன எண்ணற்ற குழந்தைகளும் உள்ளடங்கி இருக்கிறார்கள். அழிந்து போன அந்த உயிர்களுக்கு உண்மையில் நாம் செய்யும் வீர வணக்கம் தாய்மொழியையும், இனத்தையும் பற்றி சிந்தனை செய்வதும் அடுத்த தலைமுறை அத்தகைய இன்னல்களைச் சந்திக்காத வண்ணம் நமக்கான சமூகப், பொருளாதாரக் கட்டமைப்பை உருவாக்குவதும் தான்.
அண்மையில் ஒரு நண்பர் தொலைக்காட்சி நிகழ்வொன்றின் சுட்டியை எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார். தாய்மொழி பற்றிய ஒரு விவாத நிகழ்வு அது. ஆர்வம் குறைவாகவே அதனைத் திரையில் சுட்டினேன். அது கொடுத்த அதிர்வின் அலைகளோ இன்னும் அகல மறுக்கும் அளவிற்கு மிகுந்த வலி கொடுக்கிறது. அந்த நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் தமிழர்கள். உங்கள் தாய்மொழியின் சிறப்பாக நீங்கள் எதனைக் கருதுகிறீர்கள்? என்று நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் ஒரு கல்லூரி மாணவியைப் பார்த்துக் கேள்வி எழுப்புகிறார். அதற்கு அந்த மாணவி “I DINT FIND ANYTHING SPECIAL” என்ற தொனியில் எந்தவொரு வருத்தமும் இன்றி மலர்ந்த முகத்தோடு காட்சி ஊடகம் ஒன்றின் வழியாகச் சொன்ன போது, வலிமிகுந்த ஒரு தருணத்தைக் நான் கடந்ததாக உணர்ந்தேன்.
மொழியைப் பற்றிய புரிந்துணர்வும், தாய்மொழியின் இன்றியமையாத தன்மையும், இன்றைய நமது இளைஞர்களின் வாழ்க்கை முறைகளில் சிதைந்து கிடப்பதை ஒரு சமூகத்தின் வீழ்ச்சியாகவும், ஒரு மொழியின் கடுமையான பின்னடைவாகவும் தான் காண முடிகிறது. மொழி ஒரு பொருளியலுக்கான, வாழ்க்கைத் தேவை அல்லது கருவி என்று பெரும்பாலான இன்றைய இளைஞர்கள், மொழியை ஒரு புறப்பொருளாகப் பார்க்கிறார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. ஆனால் மொழி ஒரு மனிதனின் புறப்பொருளாகத் தோற்றம் கொண்டிருந்தாலும், அது மனித இனத்தின், நாகரிக வளர்ச்சியில் பண்பாட்டையும் இனத்தையும் உறுதி செய்கிற அகப்பொருளாக மாற்றம் அடைந்து இருக்கிறது. மேலும் மரபு வழியான தொடர்புகளையும், விளைவுகளையும் உருவாக்கி இருக்கிறது என்பதை மருத்துவ அறிவியல் உலகம் உறுதி செய்கிறது. “குழந்தைகள் தங்கள் தாய்மொழியின் ஓசை நயத்துடனேயே அழுகிறார்கள்” என்றொரு அண்மை ஆய்வு இதை இன்னும் வலிமையுடன் எடுத்துச் சொல்கிறது.
கருவிலிருக்கும் போதே தாயின் சிந்தனைகள் தன் குழந்தையை நேசிக்கத் தொடங்குகிறது. தொப்புள் கொடியின் மூலம் தாய் எப்படி குழந்தையின் உணவுத் தேவையைப் முழுமையடையச் செய்கிறாரோ, அதைப் போலவே தாயின் மொழியும், சிந்தனையும் குழந்தையின் அறிவுத் தேவையை அணைத்துக் கொண்டுவிடுகிறது. தாயின் சிந்தனைகள் வழியாகவே வளரும் குழந்தை தனது இருப்பைக் கண்டு கொள்கிறது. தாய் மகிழ்வுறும் போது மகிழ்வுறவும், தாய் கவலையடையும் போது இறுக்கமடையவுமாய்க் குழந்தைகள் தாயின் சிந்தனைகளை ஒட்டியே தமது வளர்நிலைகளை அடைகிறார்கள்.

இந்த மருத்துவ உண்மை சொல்லும் எளிய செய்தி தாய்மொழி மனிதனின் புறப்பொருளாக உருவாக்கம் பெற்றிருந்தாலும், மனிதனின் சிந்தனைகளை, பழக்க வழக்கங்களை, பண்பாட்டைத் தீர்மானிக்கிற அளப்பரிய ஆற்றல் கொண்ட அகப்பொருள் என்பதே ஆகும். புறச்சூழல் மாற்றங்களால் இடம் மாறி வளர்கிற குழந்தைகளின் மொழி வேறாக இருப்பினும் தாய்மொழியின் தாக்கத்தில் இருந்து அவர்களை முற்றிலும் பிரிக்க இயலாது என்பதையும் இத்தகைய ஆய்வுகள் உறுதி செய்துள்ளது. மொழி மனிதனின் வாழ்வாதாரத் தேவைகளில் ஒன்று. ஏனெனில் பருப்பொருட்களின் மறு உருவாக்க அடிப்படைகளில் ஒன்றான அறிவியல் கூறுகள், தாம் உருவாக்கிய துணைப்பொருளோடு தொடர்பு கொள்ள வகை செய்யும் அளப்பரிய கொடை தான் மொழி. புற உலகோடு தொடர்பற்ற உயிரியக்கம் நாளடைவில் தனது இயக்கத்தைத் தாமாகவே மட்டுப்படுத்தி மறைந்து போகிறது என்பதும் கூட ஒரு அறிவியல் கோட்பாடுதான்.
மொழி என்பது பேச்சு அல்லது எழுத்து வடிவாகத்தான் இருக்க வேண்டும் என்கிற நிலைப்பாடு காலப்போக்கில் உருவாகி வளர்ந்த ஒரு நிலையாகும். அப்படியானால் பேச்சு வழக்கற்ற, எழுத்துருக்களையும், ஒலிக் குறியீடுகளையும் உருவாக்கிக் கொண்டிராத கற்கால மொழியின் நிலை பற்றிய கேள்வி நமக்குள் எழும். அதற்கான விடை சைகைகள் என்பது நமக்குத் தெரியும். சைகைகள் தான் மனிதனின் முதல் மொழியாகி இருந்து, புற உலகைத் தொடர்பு கொள்கிறது. சைகைகள் மனித மூளையில் ஒரு ஒலி வடிவத்தைத் தோற்றுவிக்கிறது. ஒரு குறிப்பிட்ட சைகை குறிப்பிட்ட ஒலி வடிவினை அடைகிறது. இத்தகைய ஒலி வடிவம் நீட்சியடைந்து ஒரு வடிவுறுவைப் பெற்ற குறியீடுகளாகக் பாறைகளிலும், குகைகளிலும் வரையப்பட்டு, அப்படி வரையப்பட்ட குறியீடுகளின் தொகுப்புகள் பண்படுத்தப்பட்டு, அதன் தொடர் பயன்பாடுகள் ஒரு குறிப்பிட்ட மனிதக் குழுவை அடையாளம் கண்டது. அந்த அடையாளங்களால் தொடர்புகள், கலை, கலாசாரம், பண்பாடு, வணிகம், ஊடகம், தொழில் நுட்பம் என்று இன்றைக்கு மனித குலம் அடைந்திருக்கும் நிலைக்கு, செழிப்பான நாகரீகத்திற்கு அடிப்படைக் காரணி தாய்மொழி என்றால் அது மிகையானதா? இந்த அடிப்படை உண்மையை எம் இனத்தின் இளைஞர்களும், கல்லூரி மாணவர்களும் இன்னும் உணரவில்லையா?
இத்தனை பெருமைக்குரிய, வரலாற்றுப் பாதையில் பல்வேறு இடையூறுகளைக் கடந்து, தாக்கங்களை ஊடறுத்துப் பயணம் செய்து, நான் யார் என்பதை எனக்கு அடையாளம் செய்கிற எனது தாய்மொழி, எந்தச் சிறப்பும் அற்ற பொருளியல் வாழ்விற்கு உதவாத மொழி என்று வளர்ந்து கொழுத்த என் இனத்தைச் சார்ந்த, என் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட இன்னொரு மனிதன் பல்லாயிரம் பேர் பார்க்கக் கூடிய ஒரு ஊடகத்தில் சொல்வதை நான் குற்றமாகக் கருதுகிறேன். தனது சமூகத்தைத், தனது முன்னோரை, தனது பண்பாட்டை, தனது மொழியை, தனது நிலப்பரப்பைக் இழிவுபடுத்துகிற இத்தகைய பெருமைக்குரிய அந்தக் கல்லூரி மாணவியின் தந்தையார் ஒரு வழக்குரைஞராம். இதை அவர் சொன்னது இன்னும் அதிர்ச்சியானது. தனது குழந்தைகளுக்குத் தாய் மொழியின் இன்றியமையாமை குறித்த அடிப்படைச் சிந்தனைகளை வழங்காதவர்கள் பெற்றோராக இருப்பதற்கு அருகதை அற்றவர்கள். ஏனென்றால் “பெற்றோரால் குழந்தைகளுக்கு வழங்கப்பட முடிகிற மிகச் சிறந்த விலைமதிப்பற்ற பரிசு தாய்மொழியும், பண்பாடும் தவிர வேறொன்றுமில்லை”.
ஏறத்தாழ இன்றைய உலகில் ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட மொழிகள் வழக்கில் இருக்கின்றன. இவற்றில் மூன்றில் இரண்டு பங்கு மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லை. எழுத்து வடிவங்கள் கொண்ட மொழிகளை உலக மொழியறிஞர்கள் இருபது மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கிறார்கள். இந்த இருபது மொழிக்குடும்பங்களின் இலக்கண இலக்கியங்களில் காலம் கடந்து, அளவிட முடியாத மொழிக்குறிப்புகளைக் கொண்டது திராவிட மொழிக் குடும்பம். அது மட்டுமன்றி இந்த இருபது மொழிக்குடும்பங்களில் கி.மு 300 ஆம் ஆண்டிற்கு முந்தைய காலங்களில் பதியப் பெற்ற இலக்கியத் தொகுப்புகள், இன்றளவும் அச்சில் கிடைப்பதும், அவற்றின் பொருட்சுவையும், சொற்சுவையும் இன்றளவும் அறிந்து கொள்ள முடிகிற நிலையில் இருப்பதும் வேறு மொழிக் குடும்பங்களுக்குக் கிடையாது, இத்தகைய பெருமைகள் அடங்கிய நமக்கான பண்பாட்டையும், நாகரீகத்தையும், இலக்கியங்களையும் வழங்கிச் சிறப்பிக்கிற மொழி பற்றிய அடிப்படை அறிவு இன்றைய இளைஞர்களிடம் எந்த அளவிற்குச் சிதைந்து கிடக்கிறது என்பதற்கு முதல் பத்தியின் தொலைக்காட்சி நிகழ்வு ஒரு சிறிய எடுத்துக்காட்டு. அந்தக் கல்லூரி மாணவியைப் போல எண்ணற்ற இளைஞர்கள் மொழி பற்றியான சரியான புரிதல் இன்றி அரைகுறை ஆங்கிலத்தில் உளறிக் கொண்டு அலைந்து திரிவதை நீங்களும் பல இடங்களில் பார்க்கலாம். இன்றைய கல்வியும், சமூகமும் தான் மொழி பற்றிய தனது சிந்தனைகளை இப்படியான நிகழ்வுகளில் எதிரொலிக்கிறது.
தாய்மொழி உறவுகளை அடையாளம் காண்கிறது. தாய்மொழி இவ்வுலகுடனான நமது தொடர்பை உருவாக்குகிறது. தாய் மொழி மட்டுமே நம்மையும் இப்பேரண்டத்தையும் இணைக்கிற பாலமாக இருந்து அறிவையும், ஆற்றலையும் உள்ளீடு செய்கிறது. வேற்று மொழியில் கல்வி கற்கும் மாணவர்கள் இரண்டு ஊடகங்களைக் கையாள வேண்டிய அவலம் நிகழ்கிறது. வேற்று மொழியில் உள்ளீடு செய்யப்படுகிற கருத்துக்கள் மனித மூளைக்குள் மொழி மாற்றம் என்கிற பணியை முதலில் செய்த பிறகே சிந்தனை என்கிற செயல்பாட்டுப் பகுதியை அடைகிறது. மாறாகத் தாய்மொழியின் ஊடாக உள்ளீடு செய்யப்படும் யாவும், உடனடிச் செயலாக்கச் சிந்தனைகளை உருவாக்கி விடுகின்றன.
எடுத்துக்காட்டாக ஒரு வேடிக்கையான நிகழ்வு (எப்பொழுதோ படித்தது) நினைவுக்கு வருகிறது. தமிழ் மொழிக் கல்வி பயில்கிற ஒரு சிறுவனும், ஆங்கில வழிக் கல்வி பயிலுகிற ஒரு சிறுவனும் தம்முடைய உறவினர் ஒருவருடன் மீன் கடைக்குச் செல்லுகிறார்கள். உறவினர் இரண்டு சிறுவர்களிடமும் மீன்களைக் காட்டி ” இது என்ன?” என்று கேள்வி எழுப்புகிறார். ஆங்கில வழிக் கல்வி கற்கிற சிறுவன் “FISH” என்கிற வார்த்தையுடன் தனது பதிலை முடித்துவிடுகிறான். தாய்மொழிக் கல்வி கற்கிற சிறுவனால் “இது கெண்டை மீன், இது ஐரை மீன், இது கெழுத்தி மீன்” என்று அடையாளப்படுத்த முடிகிறது. இது எவ்வாறு நிகழ்கிறது என்பதில் கல்விக்கூடங்களையும், கற்கிற நூல்களையும் வைத்து முடிவு செய்ய இயலாது. மாறாகத் தாய் மொழியில் கல்வி கற்கிற சிறுவன் தன்னுடைய சமூகம் சார்ந்த நிகழ்வுகளுடன் தனது மொழியைத் தொடர்புபடுத்தி அன்றாட வாழ்வில் புழக்கத்தில் இருக்கிற நுண்ணிய வகைப்பாடுகளை அறிந்து கொண்டு தனது அறிவை அகலப்படுத்துகிறான் என்பதுதான் உண்மை. இதைப் போலவே வாழ்க்கைக்கான பல்வேறு கருத்துருவாக்கங்களை, பொருட்களைத் தனது மொழியுடன் நுண்ணிய தொடர்புபடுத்திப் பார்க்கிற வாய்ப்பு தாய்மொழியால் கிடைக்கிறது. மாறாக வேற்று மொழியின் பயிற்றுவிப்புகள் அவற்றை மொழிமாற்றம் செய்து விளங்கிக் கொள்வதற்கான காலத்தில் அறிவை விழுங்கி ஒருவனைத் தளர்வடைய வைக்கிறது என்ற உண்மையை உணர வேண்டிய கடமை பிள்ளைகளுக்கும், மாணவர்களுக்கும் இருக்கிறதோ இல்லையோ, பெற்றோருக்கு இருக்க வேண்டியது இன்றைய தேவைகளில் இன்றியமையாத ஒன்று.
தாய்மொழியில் ஆர்வம் இல்லாதவர்கள், சொந்த ஊரைச் சொல்வதற்கும் கூடத் தயங்கும் தன்னம்பிக்கை அற்றவர்களாகவே இருக்கிறார்கள். தாய்மொழியைச் சிறப்பாகக் கையாளத் தெரிந்தவர்கள் வெற்றிகரமான தலைமைப் பண்பு நிறைந்தவர்கள் என்பதைப் பல வெற்றி பெற்ற மனிதர்கள் உறுதி செய்து இருக்கிறார்கள்.
தாய்மொழியின் சிறப்பை இன்றைய இளைஞர்கள் உணர இயலாமைக்குப் பல்வேறு காரணிகள் இருந்தாலும், மூன்று காரணிகள் அவற்றில் மிகுந்த தாக்கத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.
1) பெற்றோர்களின் தாய்மொழி பற்றிய எண்ணங்கள்
2) சமூகக் கட்டமைப்பில் வேற்றுமொழிக்கான சிறப்பிடம்.
3) ஊடகங்களின் தாக்கம்.
இம்மூன்று காரணிகளைப் பற்றிய கூறுகளையும், அவற்றைக் களைவதற்கான வழிமுறைகளையும் பற்றிய பரந்த ஆய்வுகள் இன்றைய தேவை மட்டுமன்றித் தமிழின் மீது பற்றுக் கொண்டுள்ள ஒவ்வொரு தமிழறிஞர் அல்லது தமிழ்க் கலைஞர்களின் கடமையாகும்.
1) பெற்றோர்களின் தாய்மொழி பற்றிய எண்ணங்கள்
முதல் காரணி மிகுந்த தாக்கத்தை உருவாக்குகிற மற்றும் வாய்ப்புகள் அதிகம் இருக்கிற காரணியாகும். இன்றைய புதிய தலைமுறைப் பெற்றோர் தனது குழந்தை என்ன படிக்கிறது என்பதை விடவும், தனது குழந்தை எங்கே படிக்கிறது என்பது பற்றித் தான் அதிகம் அக்கறை கொண்டிருக்கிறார்கள். ஆங்கிலப் பாடல்களை அல்லது வேற்று மொழிச் சொற்களைத் தங்கள் குழந்தைகள் ஒப்புவிப்பதை ஒரு சமூக அடையாளமாக இன்றைக்குப் பெரும்பாலான வீடுகளில் பெற்றோர் கருதுகிறார்கள். கடந்த நான்கைந்து ஆண்டுகளில் நான் சென்று வந்த பல்வேறு தமிழ்க் குடும்பங்களில் (எனது நெருங்கிய உறவுக் குடும்பங்கள் உட்பட) வீட்டிற்கு வரும் விருந்தினரிடம் தமிழ் இலக்கியம் அல்லது மொழி தொடர்பான ஏதாவது ஒன்றைச் சொல்லிக் காட்டச் சொல்லிய பெற்றோரை அனேகமாக நான் சந்திக்கவேயில்லை. அப்படித் தமிழில் ஏதேனும் அவர்கள் சொல்லியிருந்தாலும் அது ஏதாவது ஒரு தமிழ்த் திரைப்படத்தின் உரையாடலாகவோ இல்லை திரைப்படப் பாடலாகவோ மட்டுமே இருந்தது. இதுதான் தாய்மொழி பற்றிய விழிப்புணர்வை, அதன் இன்றியமையாமையை நீர்த்துப் போகச் செய்கிற முதல் காரணி.
மேலும் குழந்தைகள் அனுப்பப்படுகிற வணிகப் பள்ளிகள் தாய்மொழியில் பேசுகிற மாணவர்களைத் தண்டிக்கிற அளவிற்கு மிகுந்த மன அழுத்தத்தை அவர்களிடம் உருவாக்கி விடுகின்றன. பெற்றோரும் சமூகப் பெருமையாக அதனைக் கருதிக் கொண்டு வாளாயிருக்கிறார்கள். இளநிலைப் பள்ளிகளில் இருந்து உருவாக்கம் பெறுகிற இந்த மனநிலை ஆழப்பதிந்து தொடர்ச்சியாகக் கல்லூரி காலம் வரையில் வேற்றுமொழிப் பயன்பாட்டில் சிறப்புற்று இருப்பதே கல்வியின் முதல் படி என்கிற நிலை சமூகத்தைப் பீடித்திருக்கிறது. இந்நிலை மாற்றம் அடைய வேண்டுமானால் இன்றைய இளைஞர்களும் அரசியல் அமைப்புகளும் தாய்மொழிக் கல்வி மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்த திட்டங்களை முன்வைக்க வேண்டும். குறிப்பாக உலகெங்கும் வாழும் தமிழ் இளைஞர்கள், இத்தகைய மாற்றத்தை ஒரு இயக்கமாகவே கொண்டு செல்ல வேண்டியது காலத்தின் தேவையாகி இருக்கிறது.
ஒவ்வொரு பெற்றோரும் இதுபற்றிய விழிப்புணர்வைப் பெறுவதற்கான திட்ட முன்வடிவங்களைத் தயார் செய்து அவற்றைப் பல்வேறு ஊடகங்களின் வாயிலாகப் பரப்புரை செய்வது ஒன்று மட்டுமே குழந்தைகளின் எண்ணத்தில் படியும் மாற்று மொழிச் சிந்தனைகளை மாற்றி அமைக்கவும், நுண்ணறிவு பெற்ற துறை சார் வளர்வு நிலைகளை நோக்கி அவர்களை நகர்த்துவதற்குமான ஒரே வழி.
2) சமூகக் கட்டமைப்பில் வேற்று மொழிக்கான சிறப்பிடம்.
இன்றைய தமிழ் மக்களின் சமூகக் கட்டமைப்பில் வேற்று மொழிக்கான சிறப்பிடம் என்பது, மிகுந்த கவலைக்குரிய காரணியாகும். குடும்பங்களில் துவங்கிக் கல்வி நிலையங்கள், அரசு அலுவலகங்கள், பயிற்சிக் கூடங்கள், ஏனைய பல்வேறு சமூகத் தளங்களில் மாற்று மொழிப் பயன்பாடு ஒரு பெருமைக்குரிய தகுதியாக மதிப்பீடு செய்யப்படுகிறது. இத்தகைய சமூகக் கட்டமைப்பிற்கு முதல் காரணியாக நம் மீது இயங்குகிற அரசமைப்பு அமைகிறது. திணிக்கப்படுகிற அல்லது வலிந்து செலுத்தப்படுகிற அரசுக் கோப்புகள் மற்றும் தொடர்புகள் வேற்றுமொழியில் கையாளப்படுவதும், சமூகக் கட்டமைப்பின் ஒரு பிரிக்க இயலாத நடைமுறையாகி இருக்கிறது. பெரும்பாலான அரசுத் துறை சார்ந்த தலைமை அதிகாரிகள் கையாள்கிற அல்லது நடைமுறையில் வைத்திருக்கிற மொழி தாய்மொழியாக இருப்பதில்லை என்பதைப் பல நேரங்களில் நான் நேரடியாக உணர்ந்திருக்கிறேன்.
தமிழில் மிகச் சிறப்பாக எழுதும் ஆற்றல் கொண்டிருக்கிற கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களும் கூட தங்களுடைய உரையாடலில் மொழிக்கலப்பின்றி பேசிப் பழகவில்லை அல்லது இயல்பாகவே அத்தகைய மாற்று மொழிக் கலப்பு அவர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. இந்தக் காரணியைப் பற்றி அதிகம் கவலை கொள்ள வேண்டியவர்களும், கவனம் கொள்ள வேண்டியவர்களும் அரசியல்வாதிகள் மற்றும் அரசுத் துறை அதிகாரிகள். தாய்மொழி வழியான தொடர்பு குறித்த சட்டங்கள் மற்றும் திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். இதனைத் “தமிழ், தமிழ்” என்று மேடைகளில் முழங்கும் அரசியல் கட்சிகளும், ஆட்சியில் இருப்பவர்களும் செய்வதில் இருந்து தவறுகிறார்கள் அல்லது குறைவாகவே சிந்திக்கிறார்கள். சமூகக் கட்டமைப்பு என்பதன் கடைசி உறுப்பினர் என்ற முறையில் இது ஒவ்வொரு தனி மனிதனின் கடமையாகவும் மாற்றம் பெற்று தாய்மொழி குறித்த மேன்மையான சிந்தனைகளைத் தனது தலைமுறைக்கு வழங்க வேண்டியது மிக இன்றியமையாதது.
3) ஊடகங்களின் தாக்கம்:
மொழியின் வளர்ச்சிக்குப் பங்காற்ற வேண்டிய ஊடகங்கள் இன்றைக்கு மொழி மற்றும் பண்பாட்டுச் சீரழிவுகளுக்குக் காரணமாகிறது. சில நாட்களுக்கு முன்னர் ஒரு உறவினரின் குடும்பத்திற்குச் சென்றிருந்தபோது முழுக்குடும்பமும் ஒரு தொலைக்காட்சித் தொடரில் மூழ்கி இருந்தது. நான் அவர்களின் இல்லத்தில் இருந்த ஒரு மணி நேரத்தில் அவர்கள் என்னுடன் உரையாடியதை விடவும் தொலைக்காட்சியோடு உரையாடிய நேரமே அதிகம். தமிழர்களின் விருந்தோம்பல் என்கிற ஒரு அரிய பண்பாடு அந்த இல்லத்தில் இறந்து கிடந்ததையும், அந்தப் பிணத்தைச் சுற்றிலும் மனிதர்கள் அமர்ந்து சகிக்க முடியாத நாற்றத்தை இமைகளால் நுகர்ந்து கொண்டிருந்த அவலத்தையும் கண்ட பிறகு உறவினர் வீடுகளுக்குச் செல்வதையே தவிர்த்து விடலாமா என்கிற கேள்வி எனக்குள் எழுந்தது.
அச்சு ஊடகங்கள் மொழிச் சிதைவில் குறைவாகவே ஈடுபட்டிருப்பினும், பண்பாட்டுச் சீரழிவில் மிகுந்த பங்காற்றுகிறார்கள். மொழி பற்றிய கட்டுரைகள், அறிவியல் தொடர்பான கலைச் சொற்கள் நிரம்பிய அறிவியல் கட்டுரைகள் இவை எல்லாம் குறைந்து ஏறத்தாழ 60% திரைப்படங்கள் சார்ந்த செய்திகளைப் பரிமாறும் ஊடகங்களாகவே இன்றைக்குப் பல வெகுமக்கள் ஊடகங்கள் இயங்குகின்றன. இதற்கான காரணம் அவற்றை எழுதுகிற அல்லது வெளியிடுகிற மனிதர்கள் இல்லை. மாறாக அவற்றை விரும்பி வாங்கிப் படிக்கிற நாம் என்கிற உண்மையை உணராது ஊடகங்களைக் குற்றம் சாட்டிக் கொண்டிருக்க இயலாது.
காட்சி ஊடகங்களில் வரும் உரையாடல்கள் ஆங்கிலேயர்களுக்கும் மொழிமாற்றத் தேவை இன்றிப் புரிந்து விடும் அளவிற்கு மாறி விட்டிருப்பது மிகுந்த கவலைக்குரியது மட்டுமன்றி வேதனையளிக்கிறது.
இந்தக் கட்டுரையின் முதல் பத்தியில் சொல்லப்பட்ட தொலைக்காட்சி நிகழ்வின் ஒருங்கிணைப்பாளர் கூடத் தான் பேசுகிற ஒவ்வொரு வாக்கியத்தின் நடுவிலும் காரணங்கள் ஏதுமின்றித் தமிழை, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டே இருந்ததும் குறிப்பிடத்தக்கது. காட்சி ஊடகங்களில் இயங்குபவர்கள் மட்டுமன்றி, இளம் தலைமுறை நடிகர்கள், இயக்குனர்கள், ஊடக நிர்வாகங்களில் பணியாற்றுபவர்கள் இவற்றில் கவனம் செலுத்த வேண்டியது அவர்களின் சமூகக் கடமையாகும். ஊடகங்கள் சமூகத்தை எதிரொலிக்கும் கருவிகள் என்பதால் இத்தகைய மாற்றங்கள் தன்னியல்பாக நிகழும் என்று நாம் எதிர் நோக்குவது அறிவீனமானது. மாறாக ஊடகங்களின் செயல்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டிய கடமையும் அதற்கான காரணங்களும் சமூகத்திடம் தான் ஒளிந்து கிடக்கிறது.
இவற்றைத் தேடிக் கண்டறிந்து சரியான பாதையில் ஊடகங்களைத் திருப்பும் பணி நமக்கானது என்பதை ஒரு போதும் நாம் மறக்க இயலாது. தமிழ் மக்களின் வரலாற்றில் மொழி எப்போதும் சிறப்பிடம் பெற்றுச் செழித்து வளர்ந்திருக்கிறது. தமிழ் கி.மு 200 ஆம் ஆண்டிற்கு முன்னரே கணக்கிட இயலாத கால வரையறையில் இலக்கியங்களையும், இலக்கணத் தொகுப்புகளையும் வாரி வழங்கிப் பயணம் செய்திருக்கிறது. இதற்கிடையில் நம் மொழி சந்தித்த இடையூறுகள் கணக்கிலடங்காதவை. இவற்றை எல்லாம் கடந்து தனது உயர் பண்புகளாலும், தொன்மையினாலும் ஓங்கி வளர்ந்து உயர்ந்த நாகரீகத்தை உலகிற்கே வழங்கிய மொழி நமக்கு வழங்கிய வசதியான நாற்காலிகளில் அமர்ந்து தான் “I dont find anything special in taammil” என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்.
 
மொழிதான் உங்களை இந்த உலகிற்கும், உலகிற்கு உங்களையும் அறிமுகம் செய்து வைத்த உன்னத வடிவம். அந்த வடிவத்தின் மீதான உங்கள் எதிர்மறை எண்ணங்கள் அல்லது இழிவு செய்தல் கண்ணாடியின் முன்னின்று உங்கள் முகத்தில் நீங்களே காரி உமிழ்வதைப் போன்று அருவருப்பானது. உலகத் தமிழர்களின் வாழ்வில் ஈழப் போர் ஒரு மிகப்பெரிய அழிவைக் கொடுத்துத் தனது மொழியின் இருப்பை அல்லது தனக்கான தனிச் சிறப்பைக் காக்கும் ஒரு அரிய பொறுப்பை இன்றைய தமிழ் இளைஞர்களிடம் வழங்கி இருக்கிறது. இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி தமிழர்களுக்கான ஒரு தேசத்தைக் கட்டமைக்க உறுதி பூண்டு, அதற்காகவே தங்கள் இன்னுயிரைத் தந்திட்ட மாவீரர்களுக்கு நாம் செய்யும் மிகப் பெரிய மரியாதையும், நினைவேந்தலும் அதுவாகத் தான் இருக்க முடியும். மாவீரர் நாளில் அதற்கான உறுதியை ஏற்போம். நம் இன, மொழி அடையாளங்களைக் காப்போம்.

Advertisements

Entry filed under: Uncategorized.

வெட்ட வெட்டத் தழைப்போம்! பிடுங்கப் பிடுங்க நடுவோம்!! அடைக்க அடைக்க உடைப்போம்!!!! அழிக்க அழிக்க எழுதுவோம்!!!! விழ விழ எழுவோம்!!!! Hva er tamilsk kultur?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


Calendar

January 2010
M T W T F S S
     
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Most Recent Posts


%d bloggers like this: